கால்பந்தாட்ட சங்க தேர்தல் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை

தமிழக கால்பந்தாட்ட சங்கத்தின் தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக கால்பந்தாட்ட சங்கத்துக்கான தேர்தல் மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி தேர்தல் நடத்தப்பட்டதாக பல்வேறு மாவட்ட கால்பந்தாட்ட சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'புதிதாக அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியலை இறுதி செய்து ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சங்கத்தின் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டதோடு, மே மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட கால்பந்து சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'சரியான நடைமுறைகளை பின்பற்றி, நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. எனவே, தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


இதை கேட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்கில் எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

-டில்லி சிறப்பு நிருபர்-

Advertisement