நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு

4


பெங்களூரு: கர்நாடகாவில் பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகமே முழு பொறுப்பு என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி கடந்த ஜூன் 4ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து பெங்கரூளுவுக்கு திரும்பியது. அப்போது, விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே சமயத்தில் திரண்டதால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் கர்நாடகா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், கூட்டநெரிசலுக்கு கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் பெங்களூரு அணி நிர்வாகத்தின் மீது அம்மாநில அரசு குற்றம்சாட்டி வருகிறது.


இந்த நிலையில், கூட்டநெரிசல் குறித்து கர்நாடகா அரசு விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.


அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டி.என்.ஏ., என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் நிறுவனம், ஜூன் 3ம் தேதி போலீசாரை தொடர்பு கொண்டு, வெற்றி விழா குறித்து தகவல் தெரிவித்தது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அனுமதி கோரவில்லை. 2009 பெங்களூரு நகர ஆணையின் படி, கட்டாய அனுமதி தேவை. இதனால் விழாவிற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.


போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், 'ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், இலவச அனுமதி' என்று பெங்களூரு அணி நிர்வாகம், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தது. அதுமட்டுமில்லாமல், அந்த அணியின் நட்சத்திர வீரர் கோலியும், வீடியோ மூலம், ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


இலவச அனுமதி என்று கூறியதால், ஒரே சமயத்தில் 3 லட்சம் பேர் குவிந்தனர். ஆனால், ஜூன் 4ம் தேதி மதியம் 3.14 மணியளவில், "மைதானத்திற்குள் நுழைய பாஸ் தேவை" என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் திடீரென அறிவித்தனர். இதனால், ரசிகர்களின் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் டி.என்.ஏ., இடையே மோசமான ஒருங்கிணைப்பு இருந்தது. நுழைவு வாயிலில் போதிய திட்டமிடல் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கூட்டநெரிசல் ஏற்பட்டது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement