பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி மாகி அணி வெற்றி

வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் மாகி மெகலோ ஸ்ட்ரைக்ர்ஸ் அணி வெற்றி பெற்றது.

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் பகல், இரவு ஆட்டங்களாக நடந்து வருகிறது.

நேற்று நடந்த 18வது லீக் போட்டியில், மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் - வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மாகே மெகலோ அணி முதலில் பந்து வீசியது. முதலில் விளையாடி வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர் பானு ஆனந்த் 46 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட மொத்தம் 82 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த சீசனில் 4 போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார். மாகி அணி பவுலர்கள் கரண் கண்ணன் மற்றும் சாகர் உதேசி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. முதல் இரு ஓவர்களில் 32 ரன்கள் என தொடக்கத்தில் அதிரடியாக ஆடினர்.

அதன் பின், 71 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்ரீகரண், சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். மாகே மெகலோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்ரீகரண் 39 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இவர் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

Advertisement