அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பழைய இடத்திலேயே இயங்கும்'

ராசிபுரம், ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பழைய இடத்திலேயே அமையும்,'' என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

ராசிபுரம் நகராட்சி மற்றும் தமிழக அரசை கண்டித்து, புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலை முன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா தலைமையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
ராசிபுரம் நகராட்சியில், தற்போது செயல்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. ஆளும் கட்சியினர் சுய லாபத்திற்காக, 8.5 கி.மீ., தொலைவில் உள்ள அணைப்பாளையம் கிராமத்திற்கு, புதிய பஸ் ஸ்டாண்ட் என்ற பெயரில் இடமாற்றம் செய்வதை கண்டிக்கிறோம். கடந்த, நான்கு ஆண்டுகளாக ராசிபுரம் நகராட்சியில் உள்ள மக்களுக்கு, மாதம் ஒருமுறை குடிநீர் வழங்கி வருகின்றனர். கடந்த, அ.தி.மு.க, ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்தை, நான்கு வருடங்களாகியும் இந்த அரசு இன்னும் செயல்படுத்தவில்லை.
இன்னும், எட்டு மாதத்தில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இதே இடத்தில் இயங்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ., சேகர், நகர செயலாளர் பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சந்திரசேகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி, மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி, பாலுசாமி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகரன், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement