கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சி : முடியனுாரில் பெருமாள் கோவில் உண்டியல், பீரோ உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வரஞ்சரம் அடுத்த முடியனுார் கிராமத்தில் ரங்கா பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக அதே கிராமத்தைச் சேர்ந்த சடையன் மனைவி சித்ரா, 40; பணி புரிந்து வந்தார். கடந்த 13ம் தேதி வழக்கமான பூஜை முடிந்ததும் இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் காலை கோவிலை திறந்த போது, உண்டியல் மற்றும் பீரோ உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க கண்மலர், 10 கிராம் வெள்ளி கண்மலர், ரூ.7,500 பணம் மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Advertisement