மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி

பாட்னா: பாட்னா மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல், துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பரோலில் வந்த கைதி பலியானார்.

பீஹார் மாநிலம் பாட்னாவில் பராஸ் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு இன்று பரோலில் வெளியே வந்த கைதி ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது மருத்துவமனையில் அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நடந்து சென்று அந்த கைதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியது. இந்த சம்பவத்தில் அந்த கைதி உயிரிழந்தார். இந்த சம்பவம் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி.,யில் பதிவாகி இருந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு விரைந்து ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய ரேஞ்ச் (பாட்னா) இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜிதேந்திர ராணா கூறியதாவது:
சந்தன் மிஸ்ரா, பியூர் சிறையில் இருந்து மருத்துவ பரோலில் விடுவிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது அறைக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுதம் ஏந்திய 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கியால் பல முறையால் சுடப்பட்டதால் சந்தன் மிஸ்ரா உயிரிழந்தார்.

மருத்துவமனை நடைபாதையில் இருந்த சி.சி.டி.,வி காட்சிகளில், சந்தன் மிஸ்ராவின் அறைக்குள் ஆயுதம் ஏந்திய ஐந்து பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் காட்டியது. அதன் அடிப்படையில் பக்சர் காவல்துறையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண தேடுதல் வேட்டையைத் தொடங்கி இருக்கிறோம். சந்தன் மிஸ்ராவுக்கு போட்டியாக உள்ள கும்பல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. மருத்துவமனை பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு ஜிதேந்திர ராணா கூறினார்.

Advertisement