பாகூரில் பஸ் நிலையம்: முதல்வர் திறந்து வைப்பு

பாகூர்: பாகூரில் 1.64 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

பாகூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு 1.52 எக்டர் பரப்பளவு நிலம் கையப்படுத்தப்பட்டது.

பின், 2022ம் ஆண்டு மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ், 1.64 கோடி ரூபாய் செலவில் பஸ் நிலைய கட்டுமான பணி துவங்கியது. பணிகள் முடிவடைந்து, பஸ் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது.

சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நான்கு நடை மேடைகள், 9 கடைகள், மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement