அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்

21

சென்னை: '' எங்களுக்கு வரும் நெருக்கடிகளை வெளியில் சொல்வதால் அவமானப்படுகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல, '' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


வரும் 25 ம் தேதி ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: கமலுடன் 2026 சட்டசபை தேர்தல் குறித்து பேசவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு


2026 சட்டசபை தேர்தல் கடுமையான தேர்தலாக இருக்கும் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.அது உண்மையல்ல. தி.மு.க., தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.,வை எதிர்ப்பவர்கள் இன்னும் கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் கூட முரண்பாடாக பேசி கொண்டு இருக்கும் நிலையை தான் பார்க்கிறோம். மற்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேரவில்லை. கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை. தி.மு.க.,வை எதிர்க்கும் சக்திகள் சிதறி கிடக்கிறார்கள் என்பது உண்மை. தி.மு.க., கூட்டணி வலுப்பெற்று வருகிறது.


அசிங்கப்பட்டு கூட்டணியில் தொடர வேண்டுமா என இ.பி.எஸ்., பேசியது, தி.மு.க., கூட்டணியில் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சியே தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. வலுவான வாதமும் இல்லை. நெருக்கடியை சந்தித்து தான் கட்சியை வளர்க்க முடியும். அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் நெருக்கடி இருந்தது. அதுபோல ஒவ்வொரு காலகட்டத்திலும் நெருக்கடியை சந்தித்து அங்குலம் அஙகுலமாக எங்களை வலுப்படுத்தி அங்கீகாரம் பெற்றுள்ளோம். இதனை வெளியில் சொல்வதால் அவமானப்படுகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல.


மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற செய்வது எங்கள் அனைவரின் பொறுப்பு. எங்கள் இடையே எத்தனை தொகுதிகளை பகிர்ந்து கொள்கிறோம் என்பது, எங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவாகும். அது சுமூகமாக தான் இருக்கும்.


தேர்தல் போட்டி என்பது இரு துருவ போட்டியாக தான் இதுவரை நடந்துள்ளது. இந்த தேர்தலிலும் நடக்கும். 3வது அணி தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி எடுபட்டது இல்லை. பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. 3வது அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மக்களை பொறுத்த வரை அதுவா... இதுவா... என்ற உளவியலில் தான் இருக்கிறார்கள்.


தி.மு.க., தலைமையிலான கூட்டணியா, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியா என்று தான் இந்த தேர்தல் நடக்குமே தவிர அதை தாண்டி உருவாக்கும் எந்த கூட்டணியும் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement