மணிமுக்தா அணையில் மீன் விற்பனை துவக்கம்

கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் மீன் விற்பனை விறு, விறுப்பாக நடக்கிறது.

கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. மழைக்காலங்களில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, விவசாய பாசன மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசனத்தை சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறுகிறது. அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் காலங்களில் மீன்கள் வளர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி மீன்வளத்துறை சார்பில் கடந்த டிச., மாதத்தில் முதல் அவ்வப்போது அணையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. மொத்தமாக 9 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்து விற்பனை துவங்கி உள்ளது.

ஒரு கிலோ ஜிலேபி மீன் ரூ.100க்கும், கெண்டை ரக மீன்கள் ரூ.150க்கும், விரால் மீன் ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த அசைவ பிரியர்கள் தினமும் காலை நேரத்தில் அணைக்கு வந்து வரிசையில் காத்திருந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.

Advertisement