நெல்லிக்குப்பம் மாணவர்களுக்கு இலவச வாலிபால் பயிற்சி வழங்கல்

நெல்லிக்குப்பம் : திருக்கோவிலுாரை சேர்ந்தவர் ஆலன்தீபக்.எம்.பி.ஏ.பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை பல்கலைகழகத்தில் வர்ம கலை பயின்று சென்னையில் மருத்துவமும் பார்த்து வருகிறார். இவருக்கும் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த டாக்டர் கொஞ்சுமொழி மகளுக்கும் திருமணம் நடந்தது.

வார இறுதி நாட்களில் நெல்லிக்குப்பத்தில் வர்மகலை சிகிச்சை அளிக்கிறார்.

இவருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்ததால் தமிழக விளையாட்டு பல்கலைகழகத்தில் வாலிபால் பயிற்சியாளருக்கான பயிற்சி யும் பெற்றார்.

நெல்லிக்குப்பம் வரும் ஆலன்தீபக் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் வாய்ப்பு இல்லாமல் சிரமபடுவதை பார்த்தார்.

உடனே வாலிபால் அசோசியேசனில் பதிவு செய்து மாணவ,மாணவிகளுக்கு தனித்தனியாக இரண்டு வாலிபால் அணிகள் தேர்வு செய்து இலவசமாக பயிற்சி அளிக்கிறார்.

இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள்.இங்கு பயிற்சி பெற்ற யாழினி,அருணா என்ற மாணவிகள் மாநில அளவிலான அணியில் விளையாடி வெற்றி பெற்றதால் சென்னையில் உள்ள விநாயகா மிஷன் பல்கலையில் இரண்டு மாணவிகளுக்கும் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுபற்றி ஆலன்தீபக் கூறுகையில்; மாணவ மாணவிகளை விளையாட்டில் சிறந்து விளங்க செய்வதன் மூலம் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற செய்வதே எனது லட்சியம் என்றார்.

Advertisement