பிளாஸ்டிக்கை உண்ணும் அதிசய புழு

எளிதில் மக்காத நெகிழிகளால் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் என்றும் தொல்லை தான். இந்தத் தொல்லையை எப்படி சீர்செய்வது என்று விஞ்ஞானிகள் துாக்கத்தைத் தொலைத்து ஆராய்ந்து வருகிறார்கள்.

அப்படி ஆராய்ந்தபோது தான் கிரேட்டர் வாக்ஸ் மோத் எனப்படும் ஓர் அந்துப்பூச்சியின் புழுவுக்கு ஓர் அதிசய ஆற்றல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அதாவது, இவற்றால் குறைந்த அடர்த்தி உடைய பாலிதீன்களை உண்ண முடியும். ஒரு பாலிதீன் பையை 2,000 புழுக்கள் 24 மணி நேரத்தில் சாப்பிட்டுவிடும்.

கனடாவில் உள்ள பிராண்டன் பல்கலை விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கை உண்ணும்போது புழுக்களின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்காணித்தனர். நாம் அதிகமான உணவு உண்ணும்போது அதிலிருந்து பெறப்படும் ஆற்றல் எப்படி கொழுப்பாக மாற்றப்பட்டுச் சேமிக்கபடுகிறதோ அதுபோல் புழுக்களின் உடலில் பிளாஸ்டிக் உருமாற்றம் அடைந்து சேமிக்கப்படுகிறது. இதனால் இவை விரைவில் இறந்துவிடுகின்றன.

எனவே அவற்றின் வாழ்நாளை நீட்டிப்பது குறித்தும் ஆய்வுகள் நடக்கின்றன. அப்படி நீட்டிக்க முடிந்தால், இந்தப் புழுக்களை வைத்து பெரிய அளவில் பிளாஸ்டிக்கை அழிக்க முடியும். இந்தப் புழுக்களை மீன்களுக்கு உணவாகவும் தரலாம். இதனால் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Advertisement