கன்னட மொழி பெயர்ப்பில் தவறு: மெட்டா நிறுவனம் மீது சித்தராமையா குற்றச்சாட்டு

5

பெங்களூரு: கன்னட மொழிபெயர்ப்பில் தவறு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் மீது கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.


இது குறித்து, சமூக வலைதளத்தில் சித்தராமையா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில், கன்னட மொழிபெயர்ப்பில் தவறு இருக்கிறது. இது போன்ற பிழைகள் உண்மைகளைத் திரித்து பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன.


அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளைப் பொறுத்தவரை இது மிகவும் ஆபத்தானது. எனது ஊடக ஆலோசகர் கே.வி. பிரபாகர் உடனடியாக திருத்தம் செய்ய வலியுறுத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களில் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு முறையாக கடிதம் எழுதியுள்ளார். சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.


சமூக வலைதளத்தில், மொழிபெயர்ப்பில் பெரும்பாலும் தவறுகள் இருப்பதை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன். தொழில்நுட்ப நிறுவனங்களின் இத்தகைய அலட்சியம் பொதுமக்களின் புரிதல் மற்றும் நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்கும். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

Advertisement