என் மீது லஞ்சப்புகார் சொன்னால் தூக்கு போட்டுக் கொள்வேன்: டி.எஸ்.பி., கொந்தளிப்பு

9

மயிலாடுதுறை: ''குற்றவாளிகளிடம் இருந்து பணம் கிடைக்கவில்லை என்பதால் என்னை தொந்தரவு செய்கின்றனர். என் மீது லஞ்சப்புகார் கூறினால், இங்கேயே தூக்குப் போட்டுக் கொள்வேன்,'' என மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக நிருபர்களிடம் டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறியதாவது: எனக்கு என்ன பிரச்னை வரும் என தெரிந்து தான் பேட்டி கொடுக்கிறேன். மனித உரிமை ஆணையத்தில், வேலை செய்யும் போது, காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி போலீஸ் ஸ்டேசனில் கஸ்தூரி என்ற பெண் இறந்த வழக்கில், போலீசார் தவறு செய்துள்ளனர். சப் இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு தொடர்பு உள்ளது என மனித உரிமைகள் ஆணைய தலைவர் மணிக்குமரனிடம் அறிக்கை அளித்தேன். அந்த அறிக்கையை அவர், அரசுக்கு அனுப்பினார். தலைமை செயலர் , உள்துறை செயலர், டிஜிபி எனன்னை இடமாற்றம் செய்ய முயற்சித்தனர். ஆனால், மணிக்குமரன் என்னை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதம் பணியில் வைத்து இருந்தார். அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அங்கிருந்து மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டேன்.


அனைத்து காவலர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் என்ன கொடுமை நடக்கிறது என்று தெரியும்.

இதற்கு காரணம்

1 .எஸ்.பி., ஸ்டாலின் ஐபிஎஸ்

2. ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர்.


பாலச்சந்தர், என்னை மட்டும் அல்ல பல அதிகாரிகளை துன்புறுத்துகிறார், வேலை செய்யவிடாமல் செய்கிறார். பிரச்னை செய்கிறார்.


என்னிடம் வாங்கிய வாகனத்தை நிர்வாகம் முதல்வர் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தினோம் என சொல்கின்றனர். என்னிடம் மெய்யநாதனுக்காக வாகனம் கேட்டுவிட்டு, முதல்வருக்காக எடுத்ததாக சொல்கின்றனர். பிறகு, முதல்வர் கான்வாயில் பைலட் ஆக போட்டனர். என்னிடம் வாகனம் இல்லை என தெரிவித்தேன். பாதுகாப்பு பணிக்கு ஒரு வாகனத்தை எனக்கு கொடுத்தனர். கான்வாயில் இரண்டு நாட்கள் ஓட்டிய பிறகு வாங்கிவிட்டனர். பிறகு வாகனம் கொடுக்கவில்லை.


நான் நடந்து பணிக்கு வந்தது குறித்து எந்த நிருபரிடமும் சொல்லவில்லை. இன்று நான் தான் உங்களை கூப்பிட்டேன். வேறு வழியில்லை. காலத்தின் கட்டாயம் இது. உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும். எத்தனை நாள் கொட்டுவீர்கள். என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போகிறீர்கள். எடுங்கள். என்னுடைய நேர்மைக்கு, 11 மாதம் செய்த பணிக்கு சஸ்பெண்ட் செய்தால் செய்துவிட்டு போங்கள்.


எங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் எப்படி பணி செய்ய முடியும்? இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், மணல் கொள்ளை மற்றும் குற்றவாளிகளிடம் பணம் பறிக்கிறார். அவர் ஒரு நேர்மையற்ற அதிகாரி. அவர் தவறான தகவலை எஸ்.பி.,க்கு சொல்கிறார். மக்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். எஸ்.பி., பாலசந்தர் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை பொது மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. இந்த அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். நான் சஸ்பெண்ட ஆனாலும் கவலைப்படவில்லை. மக்கள் ஜாக்கிரதையாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.


இந்த அரசுக்கு நெருக்கடி ஆக்குவது உயர் அதிகாரிகள் தான். கீழ் பணிபுரியும் அதிகாரி கிடையாது. முதல்வர் நல்ல பணிகளை செய்கிறார். கெட்டபெயர் ஏற்படுத்துவது இந்த அதிகாரிகள் தான். முதல்வருக்கு தெரியுமா...? தெரியாதா... என தெரியவில்லை. போலீசாரின் மன அழுத்தத்தினால், இங்கு பேசுகிறேன்.


வண்டியை வாங்கியது மட்டும் அல்லாமல், கேட்டால் 'ஏசி' யை சொல்கின்றனர். அறை மேல் ஒரு ஏசி உள்ளது. இதனை லஞ்சத்தில் வாங்கினேன் என்று சொன்னால், இங்கேயே தூக்கு போட்டு இறந்துவிடுவேன். நான் லஞ்சம் வாங்கினேன், கையூட்டு வாங்கினேன் என்று சொன்னால் இங்கேயே தூக்குபோட்டு கொள்கிறேன். போலீசிடம் விசாரியுங்கள். அனைவரிடமும் விசாரியுங்கள். நேர்மையாக வேலை செய்கிறேன். நான் கஷ்டபடுகிறேன் என்பதால் எஸ்.ஐ., கொடுத்தார். என்னைப் போல் பல அதிகாரிகள் மனக்குமுறலில் உள்ளனர். உண்மை ஜெயிக்கும் என்று நம்புகிறேன்.


என்னை சஸ்பெண்ட் செய்து கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். உண்மை வெற்றி பெற வேண்டும். உளவுத்துறை ஐஜி., செந்தில்வேல், ஏடிஜிபி டேவிட்சன், எஸ்.பி., செந்தில்வேல் , இன்ஸ்பெக்டர் பாலசந்தர் ஆகியோரிடம் கேள்வி கேட்க வேண்டும். அமைச்சருக்கு தொடர்பு கிடையாது. ஜால்ரா அடிக்க காரை கேட்டனர். அதிகாரிகள் பழிவாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மறுப்பு



இதனிடையே, நிருபர்களிடம் பேசிய மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின், டி.எஸ்.பி., சுந்தரேசனின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துவிட்டார்.

Advertisement