கோவில் நகை கையாடல் எஸ்.பி.,யிடம் மக்கள் புகார்
திருச்சி:திருச்சி அருகே கோவிலுக்கு சொந்தமான, 500 சவரன் நகையை கையாடல் செய்ததாக, கோவில் அறங்காவலர் மீது, திருச்சி எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மால்வாய் கிராமத்தில் அய்யனார், பிடாரியார், செல்லியம்மன், கருப்பண்ணசாமி கோவில் உள்ளது.
மிகவும் பழமையான இந்த கோவிலில், கடந்த, 2019ம் ஆண்டு முதல், அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன் அறங்காவலராக நியமிக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்தார். இவர் மீண்டும் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாஸ்கரன், கோவில் நகை, 500 சவரனையும் கோவிலுக்கு சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து ஏராளமான பணத்தையும் கையாடல் செய்து விட்டதாக, கிராம மக்கள் நேற்று திருச்சி எஸ்.பி., செல்வநாகரத்னத்திடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், ''போலீசாரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து, கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும்,'' என்றார்.