சென்னை பயிற்சியாளர் விலகல் * ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில்

சென்னை: சென்னை கால்பந்து அணி பயிற்சியாளர் ஓவன் கோயல் பதவி விலகினார்.
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் 2015, 2017-18 என இரு முறை சாம்பியன் ஆனது சென்னை அணி. இதன் பயிற்சியாளராக 2019-20ல் ஸ்காட்லாந்தின் ஓவன் கோயல் செயல்பட்டார். இதில் சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. அடுத்தடுத்த தொடர்களில் சென்னை அணியில் செயல்பாடு மோசமாக அமைய, 2023ல் மீண்டும் ஓவன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த சீசனில் சென்னை அணி 24 போட்டியில் 27 புள்ளி மட்டும் எடுத்து, 11வது இடம் (மொத்தம் 13) பிடித்தது. சொந்தமண்ணில் 3 போட்டியில் மட்டும் வென்றது. வெற்றிக்கு அருகில் சென்று கடைசியில் தோற்றதால் 11 புள்ளிகளை இழக்க நேரிட்டது.
இருப்பினும் ஓவன் ஒப்பந்தம், கடந்த ஆண்டு, 2026 வரை சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது. தற்போது ஐ.எஸ்.எல்., தொடரின் 13வது சீசன் எப்போது துவங்கும் என உறுதியாகத் தெரியாத நிலையில், சென்னை அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓவன், பரஸ்பர ஒப்பந்தத்தின் படி விலகினார்.
இதுகுறித்து சென்னை அணி தரப்பில் வெளியிட்ட செய்தியில், 'சென்னை அணிக்காக தங்களின் மதிப்பு மிக்க பங்களிப்புக்கு நன்றி. உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்,' என தெரிவித்துள்ளது.

Advertisement