தேஜாஸ் போர் விமான இறக்கை: ஹெ.ஏ.எல்.,லிடம் ஒப்படைப்பு கோவை எல் அண்டு டி நிறுவனம் சாதனை

1

கோவை: முதன்முறையாக, தேஜாஸ் எம்.கே.1ஏ., இலகு ரக போர்விமானத்தின் இறக்கைகளைத் தயாரித்து, ஹிந்துஸ்தான் ஏரோ நாடிகல் நிறுவனத்துக்கு ஒப்படைத்து, கோவை எல் அண்டு டி நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை படைத்துள்ளது.


'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் முயற்சியை முன்னெடுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பு மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியில் தற்சார்பை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இந்தியாவின் இலகு ரக தேஜாஸ் எம்.கே.1ஏ., போர் விமானத்தின் இறக்கைகளின் முதல் ஜோடியை உருவாக்கி, ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் (ஹெச்.ஏ.எல்.,) நிறுவனத்திடம், கோவையைச் சேர்ந்த எல் அண்டு டி நிறுவனம் ஒப்படைத்துள்ளது.


இறக்கைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோவை எல் அண்டு டி வளாகத்தில் நடந்தது.
ஹெச்.ஏ.எல்., தேஜாஸ் பிரிவின் பொது மேலாளர் அப்துல் சலாம், இறக்கைகளைப் பெற்றுக் கொண்டார். நிறுவனத்தின் பாதுகாப்பு உற்பத்திப் பிரிவு செயலாளர் சஞ்சீவ் குமார், காணொளிக் காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


சஞ்சீவ் குமார் பேசுகையில், “பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பு நிலையை எட்ட, ஹெச்.ஏ.எல்., மற்றும் எல் அண்டு டி இடையேயான கூட்டு, மிகச்சிறந்த அடியெடுத்து வைத்துள்ளது. தனியார் நிறுவனங்களுடனான வலிமையான கூட்டு ஒத்துழைப்பு காரணமாக, ஹெச்.ஏ.எல்., இலகு ரக போர் விமான எம்.கே.1ஏ., உற்பத்தியில், வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, தற்சார்பை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. சிக்கலான பாதுகாப்பு தொழில்நுட்பத்தில், நமது திறன் விரிவடைந்துள்ளது” என்றார்.


ஹெச்.ஏ.எல்., தலைவர் சுனில், கூறுகையில், “ தற்சார்பை எட்டுவதற்காக ஹெச்.ஏ.எல்., பெரு நிறுவனங்களோடும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களோடும் நெருக்கமான உறவைப் பேணுகிறது. எல் அண்டு டி நிறுவனத்துடனான கைகோர்ப்பு அர்ப்பணிப்பு மிக்கது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, விமான உபகரணங்களை தயாரிப்பது தேஜாஸ் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியாகும்” என்றார்.


எல் அண்டு டி நிறுவன, முதுநிலை துணைத் தலைவர் அருண் ராம்சந்தானி கூறுகையில், “முதல்கட்டமாக ஆண்டுக்கு நான்கு ஜோடி இறக்கைகள் ஒப்படைக்கப்படும். தானியங்கி மற்றும் அதிநவீன பொருத்துதல் தொழில்நுட்பம் வாயிலாக ஆண்டுக்கு 12 ஜோடி தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.


தேஜாஸ் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஹெச்.ஏ.எல்., ஏற்கனவே, எல்.எம்.டபிள்யூ., ஆல்பா டோகால், அம்பெனால், டாடா, வெம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து, விமான பாகங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement