சரியாக அளவீடு செய்து வரி வசூலிக்கவில்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

காஞ்சிபுரம்:மாநகராட்சி ஊழியர்கள் சரியாக அளவீடு செய்து, வரி வசூலிக்காததால் அரசிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என, கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,- மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தீண்டாமை குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, ஆணையர் ஏன் கூட்டங்களுக்கு வருவதில்லை; நகராட்சி மேல்நிலைப் பள்ளி கட்டடம் அருகே தண்ணீர் தேங்குகிறது; கழிவுநீர் அடைப்பு வாகனம் சரியாக வருவதில்லை. வந்தாலும், கழிவுநீரை சரியாக முறையாக அகற்றுவதில்லை.

மஞ்சள் நீர் கால்வாயில் ஓட்டை போட்டு தண்ணீர் விடுகின்றனர்; அம்மங்கார தெருவில் குழாய் உடைப்புக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதை சரி செய்யாமல் இருப்பதால் அந்த சாலை வழியாக செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது என, மேயருக்கு கவுன்சிலர்கள் புகாரை முன் வைத்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்


சிந்தன் - அ.தி.மு.க., கவுன்சிலர்:
ஜெம் நகர் பகுதியில் கால்வாய் கட்டும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் சரியாக செய்யவில்லை.மீண்டும் ஏன் அவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

மகாலட்சுமி - மேயர்: ஒப்பந்தம் எடுத்தவர் வேலை சரியாக செய்யவில்லை எனில், உங்கள் கோரிக்கையை புகாராக பதிவு செய்யுங்கள்.

கயல்விழி - தி.மு.க., கவுன்சிலர்: தனியார் திருமண மண்டபங்கள், வணிக கடைகளுக்கு சரியான முறையில் அளவீடு செய்து வரி நிர்ணயம் செய்யவில்லை. இதனால், அரசிற்கு இழப்பீடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புக் கொண்டாலும், அவரின் மொபைல் போன் வேறு ஒருவரிடம் கொடுத்து பின் பேசுகிறேன் என்கிறார். அவர் போன் எடுக்கவில்லை என, குறுஞ்செய்தியாக பதிவு செய்து, அவருக்கு அனுப்பியுள்ளேன். ஒரு கவுன்சிலர் போன் செய்தால், ஒரு அதிகாரி அந்த கவுன்சிலர் நெம்பரை சேமித்து வைத்திருக்க மாட்டாறா

கணேசரங்கன் - நகர் ஊரமைப்பு அலுவலர்,:
பி.எஸ்.என்.எல்., நெட் ஒர் சரியாக கிடைக்கவில்லை. இதனால், ஜியோவிற்கு மாறியுள்ளேன். அதனால், போன் சரியாக கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.

மகாலட்சுமி - மேயர்:
அவர் கூறுவதை குறிப்பெடுத்து சரி செய்ய பாருங்கள்.

கார்த்திக் - தி.மு.க., 48வது வார்டு கவுன்சிலர்: தனி நபர்கள் வீடுகள் மீது, அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் எத்தனை ? அனைத்து விளம்பர பதாகைகளும் சரியான அளவு உள்ளதா ? அதற்குரிய கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக வசூலித்துள்ளதா ? மாநகராட்சி அதிகாரிகள் தெளிவு படுத்த வேண்டும்.

கணேசரங்கன் - நகர் ஊரமைப்பு அலுவலர்:
சரியான அளவில் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் - தி.மு.க., 48வது வார்டு கவுன்சிலர்:
நீங்கள் என்னுடன் வந்து மீண்டும் அளந்து காட்டுங்கள். குறைந்த அளவிற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விளம்பர பதாகை அமைத்த நிறுவனமும், அதிக அளவு பதாகை அமைத்துவிட்டு, பல லட்சங்கள் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

மகாலட்சுமி - மேயர்:
பொது இடங்களில் அமைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை மீண்டும் ஒரு முறை அளவீடு செய்யுங்கள். இதற்கு எத்தனை நாளில் செய்து முடிப்பீர்கள் என, அவகாசம் கொடுங்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement