ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் முதல் போக சாகுபடிக்கு நீர் திறப்பு
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களில், முதல்போக சாகுபடிக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து, 120 நாட்களுக்கு வலது கால்வாயில், 26 கன அடி, இடது கால்வாயில், 62 கன அடி, தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம், 5,918 ஏக்கரும், வலதுபுற கால்வாய் மூலம், 2,082 ஏக்கர் என மொத்தம், 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன. ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள, 22 பஞ்.,களின் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.