10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்
தர்மபுரி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், அருள்சுந்தரம் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சாமிநாதன், தமிழக
ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சென்னகேசவன், உட்பட நிர்வாகிகள் பலர் கோரிக்கைகள் குறித்து, விளக்கி பேசினர்.
தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 47 பெண்கள் உட்பட, 150 பேரை போலீசார் கைது செய்தனர்.