ரஷ்யா கச்சா எண்ணெய்: நேட்டோ எச்சரிக்கையை நிராகரித்தது இந்தியா

2

புதுடில்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து நேட்டோ தலைவர் எச்சரிக்கையை நிராகரித்த வெளியுறவு அமைச்சகம் , 'இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதே முக்கியம் ' என தெரிவித்துள்ளது.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ராணுவ ஒத்துழைப்புக்கான, நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போர் துவங்கியது. இந்த அமைப்பில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.


இதையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையை விதித்தன. ஆனால் இதை மீறி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கி வருகின்றன.


நேட்டோ அமைப்பின் பொதுச் செயலரும், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமருமான மார்க் ருட்டே, 'ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும்' என மிரட்டல் விடுத்து இருந்தார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகள் தற்போதைய சந்தை சூழ்நிலை மற்றும் புவிசார் அரசியல் நிலைகளை பொறுத்தது. இந்த விஷயம் குறித்த அறிக்கைகளை நாங்கள் பார்த்துள்ளோம். அதில் ஏற்படும் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நமது மக்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வது இந்தியாவுக்கு ஒரு முக்கிய முன்னுரிமை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த முயற்சியில், சந்தைகளில் கிடைப்பதாலும், உலகளாவிய சூழ்நிலைகளை பொறுத்தும் நாம் வழிநடத்தப்படுகிறோம். இந்த விஷயத்தில் இரட்டை வேடம் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement