மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் பஸ் நின்று செல்ல கோரிக்கை

ப.வேலுார், ப.வேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளி சாலையில் உள்ளது. சற்று துாரத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தினமும் காலை, 8:00 மணிக்கு அரசு டவுன் பஸ் வி.1 மோகனுாரில் இருந்து புறப்பட்டு, ப.வேலுார் வழியாக கபிலர்மலை செல்கிறது.

பள்ளி வேலை நாட்களில் ஓலப்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி பகுதிகளில் இருந்த மாணவ, மாணவியர், 70க்கும் மேற்பட்டோர் இந்த பஸ்சில், ப.வேலுார் பள்ளி சாலையில் உள்ள அரசு பள்ளிக்கு வருகின்றனர். காலை, 9:00 மணிக்கு அரசு டவுன் பஸ் வி.1 ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாசலில் பள்ளி மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக செல்கிறது.

சிறிது துாரத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலை பள்ளிக்கு மாணவியர், 30க்கும் மேற்பட்டோர் இறங்கி, பத்து நிமிடம் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். மாணவர்கள் பள்ளி முன் பஸ் நிறுத்தி செல்வது போல், மகளிர் பள்ளி முன் நிறுத்திச்சென்றால் உதவியாகவும், மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என, மாணவிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement