நீச்சல்: ரோகித் தேசிய சாதனை * உலக பல்கலை., விளையாட்டில்

ரினே-ருஹ்ர்: ஜெர்மனியில் 32 வது உலக பல்கலை., விளையாட்டு நடக்கிறது. 114 நாடுகள் பங்கேற்றுள்ளன. 18 விளையாட்டில் 234 பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. இந்தியாவின் 90 பல்கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். நீச்சலில் ஆண்களுக்கான 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் போட்டி நடந்தது.
இந்தியா சார்பில் ஹர்ஷ் சரோஹா, ரோகித் பெனடிக்சன் (தமிழகம்), பங்கேற்றார். சமீபத்தில் புவனேஸ்வரில் நடந்த தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 100 மீ., தங்கம் வென்ற ரோகித், 6வது தகுதிச்சுற்றில் களமிறங்கினார். இதில், 24.00 வினாடியில் வந்து, ரோகித் முதலிடம் பிடித்தார். தவிர இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2018ல் விர்தவால் காடே, 24.09 வினாடி நேரத்தில் வந்து இருந்தார்.
ஒட்டுமொத்தமாக ரோகித், 12வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு வீரர் ஹர்ஷ், 25.41 வினாடியில் வந்து, 4வது தகுதிச்சுற்றில், 4வது இடம் பெற்றார். ஒட்டுமொத்தமாக் 52வது இடம் பெற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். 400 மீ., பிரீஸ்டைல் போட்டியில் இந்தியாவின் அனீஷ் (22 வது இடம்), ஷிவாங்க் (29) ஏமாற்றினர்.
டேக்வாண்டோ 'ரவுண்ட் 16' போட்டியில் இந்தியாவின் தனிஷக், ஆஸ்திரேலியாவின் கிரிப்பினிடம் தோற்றார். ஷானாஸ் பர்வீன், குரோஷியாவின் லுசிஜாவிடம் வீழ்ந்தார்.
பெண்களுக்கான வாள் சண்டை எபீ பிரிவில் இந்தியாவின் மிடவா ஜேசங்பாய், 15-6 என பிரிட்டனின் ஹாரியத்தை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் தனுஜா 10-15 என சுவிட்சர்லாந்தின் லுலியாவிடம் தோல்வியடைந்து, 70வது இடம் பெற்றார்.

Advertisement