கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது

21


கோவை: கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.


கோவையில் ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக இந்திரா,54, பணிபுரிந்து வருகிறார். சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கோவிலில் அதிக வருவாய் வருகிறது. ஆனால் அந்த கோவிலில் முறையான நிர்வாகம் இல்லை. அக்கோவிலை இந்து சமய அறநிலைய துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுரேஷ்குமார், இந்திராவிடம் மனு அளித்தார்.

ஐகோர்ட் அறிவுறுத்தல்

இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 16ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'கோவிலை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும் நடைமுறையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், சுரேஷ் குமார், அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை சந்தித்தார். அப்போது, 'கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால், தனக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் தர வேண்டும்' என்று இந்திரா கேட்டுள்ளார்.

பேரம் பேசிய உதவி கமிஷனர்


'அவ்வளவு பணம் தங்களால் தர இயலாது' என்று கூறிய நிலையில், இரண்டு லட்சம் ரூபாய் தருமாறு கேட்டார். பல முறை பேரம் பேசி, கடைசியில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் பரிந்துரை செய்வதாக ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுரேஷ்குமார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு, புகார் அளித்தார்.


லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய, ரூ.1.5 லட்சத்தை, இந்திராவிடம் சுரேஷ் வழங்கினார். அப்போது மறைந்து இருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் வாங்கிய, இந்திராவை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement