'ஏர் இந்தியா' விமான பைலட் குறித்து அவதுாறு 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்திற்கு, விமானியின் தவறே காரணம் என்ற ரீதியில் கட்டுரை வெளியிட்ட அமெரிக்க நாளிதழ், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' மன்னிப்பு கோர வலியுறுத்தி, இந்திய விமானிகள் கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, கடந்த மாதம் 12ம் தேதி புறப்பட்ட, 'ஏர் இந்தியா போயிங் 787 - 8 ட்ரீம்லைனர்' விமானம் விழுந்து நொறுங்கியது.

உரையாடல்



இது தொடர்பாக விசாரித்த ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணைக் குழு, கடந்த 12ம் தேதி மத்திய அரசிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. விமானத்தின் எரிபொருள் வினியோகம் துண்டிக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என அதில் கூறப்பட்டது.

விமானிகளுக்கான, 'காக்பிட்' அறையில், இரு விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் விபரங்களும் அறிக்கையில் வெளியிடப்பட்டது.

இந்த விசாரணை அறிக்கையை மேற்கோள்காட்டி, அமெரிக்காவின் பிரபல நாளிதழான 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' சமீபத்தில் செய்தி வெளியிட்டது.

அதில், 'விமானத்திற்கான எரிபொருள் சுவிட்ச், 'கட் ஆப்' ஆனது தொடர்பான இரு விமானிகளின் உரையாடல் விசாரணை அறிக்கையில் வெளியாகிஉள்ளது.

'இந்த தகவல், விபத்துக்கான முக்கிய காரணமாக மனித தவறே இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எரிபொருள் சுவிட்ச் நிறுத்தப்பட்டது குறித்த தகவலும் அதில் இல்லை' என, தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்கு, விமானிகளே காரணமாக இருக்கக் கூடும் என்ற ரீதியில் செய்தி வெளியிடப்பட்டதற்கு, எப்.ஐ.பி., எனப்படும், இந்தியா விமானிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோர வலியுறுத்தி, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் மற்றும், 'ராய்டர்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு, இந்திய விமானிகள் கூட்டமைப்பு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.

அதன் விபரம்:

விமான விபத்து தொடர்பாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' மற்றும், 'ராய்டர்ஸ்' நிறுவனங்கள் வெளியிட்ட செய்தி பொறுப்பற்றவை. முற்றிலும் சரிபார்க்கப்படாத அறிக்கையை, அந்த நிறுவனங்கள் வெளியிட்டது கண்டனத்துக்குரியது.

குறிப்பாக, விபத்து தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழலில், இது போன்ற செய்திகள் வெளியிடுவது, உயிரிழந்த விமானிகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த துயரமான நேரத்தில், அவர்களின் குடும்பங்களின் மன உறுதியை குலைக்கும் வகையில் இந்த செய்தி உள்ளது. பிற விமானிகளையும், இது அவமதிக்கிறது.

பதற்றம்



பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை ஊடகங்கள் வெளியிட கூடாது.

எனவே, முழு விசாரணை முடியும் வரை யூகங்கள் அடிப்படையில் செய்திகளை வெளியிட வேண்டாம். முன்கூட்டியே எடுக்கப்படும் முடிவுகள், நேர்மையான விசாரணையை பாதிக்கும்.

விமானிகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுரை வெளியிட்டதற்கு இரு நிறுவனங்களும் பகிரங்கமான மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

@block_B@

யூகங்கள் வேண்டாம்!

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைவர் ஜெனிபர் ஹொமண்டி வெளியிட்டுள்ள அறிக்கை:ஆமதாபாத், 'ஏர் இந்தியா' விமான விபத்து தொடர்பாக, ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. யூகத்தின் அடிப்படையிலேயே இது போன்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. முழுவிசாரணைக்கு பின்னரே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். அது வெளியாக, சில மாதங்களாகும் என்ற நிலையில், விபத்து குறித்து யூகங்களின் அடிப்படையில், ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டாம். இதனால், மக்கள் பதற்றத்திற்கு ஆளாவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. block_B

Advertisement