மாணவி துாக்கிட்டு தற்கொலை பேராசிரியர்கள் இருவர் கைது

நொய்டா: உத்தர பிரதேசத்தில், கல்லுாரி பேராசிரியர்கள் மனதளவில் துன்புறுத்தி யதாக கூறி, இரண்டாம் ஆண்டு படித்த பல் மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் தனியார் மருத்துவ பல்கலை உள்ளது.

இங்கு, குருகிராமைச் சேர்ந்த ஜோதி சர்மா என்ற மாணவி, இரண்டாம் ஆண்டு இளநிலை பல் மருத்துவப்படிப்பு படித்து வந்தார்.

பல்கலை விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோதி சர்மாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அவரது அறையில் சோதனையிட்டதில், கடிதம் சிக்கியது.

அதில் 'பல்கலையில் உள்ள இரண்டு பேராசிரியர்கள் என்னை மன ரீதியில் துன்புறுத்தினர்; அவமானப்படுத்தினர். நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருக்கிறேன். இனியும் இதுபோல் என்னால் வாழ இயலாது.

'எனவே, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்' என ஜோதி சர்மா குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, ஜோதி சர்மாவின் பெற்றோர் அளித்த புகாரின்படி, பல்கலையின் இரண்டு பேராசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, இந்த விவகாரம் பற்றி அறிந்த சக மாணவர்கள் பல்கலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலி கையெழுத்து போட்டதாக, மாணவி ஜோதி சர்மா மீது இரண்டு பேராசிரியர்களும் குற்றஞ்சாட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அவர்கள் இருவரையும் பல்கலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

Advertisement