டில்லி உஷ்ஷ்ஷ்: சபாநாயகரால் சர்ச்சை?

6

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து பார்லி மென்ட் எம்.பி.,க்களுக்கும், நம் அரசியலமைப்பு புத்தகத்தை அனுப்பி உள்ளார். இந்த அரசியலமைப்பின் முன்னுரையில், மதசார்பின்மை மற்றும் பொது உடமை வார்த்தைகள் இல்லை.

சட்ட நிபுணர் அம்பேத்கர் மற்றும் பலர் தயாரித்த, நம் அரசியலமைப்பு 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, இந்த இரண்டு வார்த்தைகளும் முன்னுரையில் இல்லை. இந்திரா, 1975ல் அவசர சட்டத்தைக் கொண்டு வந்தார். 1976ல் மதசார்பின்மை மற்றும் பொது உடைமை வார்த்தைகள், அரசியலமைப்பில் இந்திரா அரசால் சட்ட திருத்தம் வாயிலாக சேர்க்கப்பட்டன. ஓம் பிர்லா, சக எம்.பி.,க்களுக்கு அனுப்பிய அரசியலமைப்பு புத்தகம், 1976க்கு முன் வெளியானதின் மறுபதிப்பு.

இது எதிர்க்கட்சியினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. எதற்கு சபாநாயகர் இந்த புத்தகத்தை அனுப்பியுள்ளார்?

'ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும், பா.ஜ.,வும் இந்த இரண்டு வார்த்தைகளை அரசியல் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என கூறி வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக, ஓம் பிர்லா செயல்படுகிறாரா?' என, கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராகுல் எங்கு போனாலும், கையில் ஒரு சிறு அரசியலமைப்பு புத்தகத்தை மக்களுக்கு காண்பித்து, 'இதை பா.ஜ., அரசு மாற்றப் பார்க்கிறது; ஆனால், அதை நடக்க விட மாட்டோம்' என, சொல்லி வருகிறார். 'இதற்கு பதிலடி கொடுக்கவே, சபாநாயகர் இப்படி செய்துள்ளார்' என, சொல்லப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எங்கெல்லாம் இப்படி ராகுல் தேர்தல் பிரசாரம் செய்தாரோ, அங்கெல்லாம் காங்., படுதோல்வியைச் சந்தித்தது என்பதுதான் உண்மை!

Advertisement