ஆட்சியின் இறுதி கட்டத்தில் மக்களின் நினைப்பு ஸ்டாலின் குறித்து பழனிசாமி கிண்டல்

நாகப்பட்டினம்,:'மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தோடு கடந்த 7ம் தேதி முதல் தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி நேற்று நாகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது நாகை அவுரித்திடலில் பேசியதாவது,

நான் ஒவ்வொரு ஊராக போவதற்கு முன்னால் ஸ்டாலின் போகிறார். ஏன் போகிறார், எதற்காக போகிறார் என தெரியவில்லை. நான் செல்லும் இடங்களுக்கு, திட்டங்களை செய்து கொடுத்து விட்டு உரிமையோடு செல்கிறேன்.

மக்களின் சிந்தனைக்கு ஏற்ப அ.தி.மு.க., ஆட்சி இருந்ததால் மக்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. ஸ்டாலின் எப்போதும் தன் வீட்டு மக்களை பற்றியே சிந்திக்கிறார். மக்களை பற்றி கவலைப்படவில்லை.

தமிழகத்தில் 4 அதிகார மையம் உள்ளது. முதலாவது ஸ்டாலின், 2வது அவரது மனைவி, மூன்றாவது மருமகன், நான்காவது அவரது மகன். நால்வரும் 50 மாதமாக தமிழகத்தை ஆட்டி படைக்கின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதால் நிர்வாகம் சிறப்பாக இருந்தது. மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைய நிறைவேற்றப்பட்டன. டெல்டா விவசாயிகள் நலனுக்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டப்பூர்வமாக கொண்டு வரப்பட்டது.

மீத்தேன், ஈத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கொண்டு வந்தது தி.மு.க., 50 ஆண்டு கால காவிரி பிரச்னையை சட்டப் போராட்டம் மூலம் விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது அ.தி.மு.க., அரசு.

கோதாவரி - காவிரி இணைப்பு பெரிய திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்பதால் அத்திட்டத்தை கொண்டு வந்தோம். கிடப்பில் போட்டனர். காவிரியை நம்பி 20 மாவட்ட மக்கள் உள்ளனர்.

நடந்தாய் வாழி காவிரி என திட்டத்தை மத்திய அரசு ஏற்று குடியரசு தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 11500 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் கடைமடை மக்கள் வரை சுத்தமான குடிநீரை பயன்படுத்த முடியும்.

மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் 25 சதவீதம் வீணாகிறது. அதை தடுத்து கால்வாய் மூலம் விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்க, 36 ஆயிரம் கி.மீ., தூரம் வாய்க்கால், கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற திட்டம் தீட்டப்பட்டது. அதை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டு விட்டது.

விவசாய தொழிலாளர்களுக்காக ஏராளமான திட்டங்களை அ.தி.மு.க., அரசு கொண்டு வந்தது. தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் 6 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. கஜா புயலால் வீடுகளை இழந்த 6 ஆயிரம் மீனவர்களுக்கு வீடு வழங்கப்படும்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் என்பது வாடிக்கை. கடும் வறட்சி, வெள்ளம், கஜா புயல், கொரோனா காலத்தில் கூட, வருமானமே இல்லாத நிலையிலும் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட பொம்மை முதல்வருக்கு தெரியாது.

டெல்டாகாரன் என வீர வசனம் பேசுவார். அதை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளை காப்பீடு திட்டத்தில் சேர்த்து இருந்தால் பயன் பெற்று இருப்பார்கள். காப்பீட்டில் அதிக இழப்பீடு வாங்கி கொடுத்தது அ.தி.மு.க., விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் காப்பீடு பெற்று கொடுத்துள்ளோம்.

வீடு வீடாக அட்டைய தூக்கி வராங்க, 46 பிரச்னையை கேட்கிறார்கள். 45 நாட்களில் தீர்த்து வைப்பார்களாம். நான்கு ஆண்டுகளாக குடும்பத்துடன் இருந்த முதல்வருக்கு இப்போது தான் மக்களை பற்றிய சிந்தனை வருகிறதா, 8 மாதத்தில் ஆட்சி முடியப்போகிற நிலையில் என்ன செய்யப் போகிறீர்கள். மக்களை ஏமாற்றும் வேலை. இதுதான் ஸ்டாலின் தந்திரம்.

ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, ஊர், ஊராக போய், பாய் விரித்து உங்களுடைய குறைகளை மனுக்களாக பெட்டியில் போடுங்கனு, பெட்டிய பூட்டி சாவி எடுத்துட்டு போனாரு, அப்பவே மனு கொடுத்தாங்க, அந்த மனுக்கள் என்னாச்சு.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.

Advertisement