ஈ.வெ.ரா., நுாலகப் பணியில் கண் திருஷ்டி படம் எதற்கு! பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு விளக்கம்

21

கோவை : கோவையில், ஈ.வெ.ரா., பெயரில் கட்டப்படும் நுாலகத்துக்கு முன், இரண்டு இடங்களில், கண் திருஷ்டி படங்கள் வைத்திருப்பது ஏன் என்பதற்கு, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேற்று விளக்கம் அளித்தார்.


கோவை காந்திபுரத்தில், ரூ.300 கோடியில், 6.98 ஏக்கரில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில், எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படுகிறது. இப்பணியை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார். தரத்தை ஆய்வு செய்த அவர், தளத்துக்கு பதிக்கப்பட உள்ள கிரானைட் கற்களை பார்வையிட்டார்.


அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''நுாலகம் கட்டுமான பணியை ஜனவரிக்குள் முடித்து, தைப்பொங்கலுக்குள் திறக்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஐந்தாவது தளம் கட்டப்படுகிறது; இன்னும் இரண்டு தளங்கள் கட்ட வேண்டும். தரமாக, வேகமாக கட்டுமான பணி நடக்கிறது; டிசம்பர் மாதத்துக்குள் பணி முடியும்,'' என்றார்.



அப்போது, 'ஈ.வெ.ரா., பெயரில் கட்டப்படும் நுாலகத்தின் முன், கண் திருஷ்டி படங்கள் வைக்கப்பட்டிருக்கிறதே...' என, ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.


அமைச்சர் வேலு பதிலளிக்கையில், ''கண் திருஷ்டி படங்கள் வைத்திருப்பது எனது கவனத்துக்கு வரவில்லை. நான் ஒரு பெரியாரிஸ்ட்; பகுத்தறிவாளன். இதுபோன்ற விஷயங்களை ஏற்றுக் கொண்டதில்லை. கட்டுமான பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், என்னை போல் பெரியாரிஸ்ட்டாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அவருக்கு ஏதேனும் நம்பிக்கை இருந்து, அதனடிப்படையில் வைத்திருக்கலாம். அரசும், நானும் இதுபோன்ற படங்கள் வைக்க எவ்வித ஒப்பந்தமும் போடவில்லை. அவருடைய நம்பிக்கை; அவர் வைத்திருக்கிறார். கட்டட பணி முடிந்த பிறகு, அவை இருக்காது,'' என்றார்.


@block_B@

'அரசியல் வேண்டாம்'

அமைச்சர் வேலு, பேட்டியை துவக்குவதற்கு முன், 'சென்னை செல்வதற்கு விமான நிலையம் போக வேண்டும். அரசியல் கேள்விகள் வேண்டாம்' என, நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்.block_B

Advertisement