'டவர்' இல்லை; 'சிக்னல்' இல்லை பி.எஸ்.என்.எல்.,லில் பெருந்தொல்லை

32

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் மொபைல் போனுக்கே சிக்னல் கிடைக்காத பரிதாப நிலை உள்ளதாக புலம்பி வருகின்றனர்.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் டெலிகாம் நிறுவனங்களை காட்டிலும் குறைந்த விலையில், 'ரீசார்ஜ்' வசதிகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

இருப்பினும், பழைய உள்கட்டமைப்புடன் கூடிய, 'டவர், நெட்வொர்க்' பிரச்னைகளால், சமீப ஆண்டுகளாக இந்நிறுவனம் திண்டாடி வருகிறது.

கடந்தாண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள், ரீசார்ஜ் விலையை திடீரென உயர்த்தியபோது, பி.எஸ்.என்.எல்., 'சிம் கார்டு' வாங்க மக்கள் படையெடுத்தனர். அப்படி வாங்கியவர்களுக்கு திருப்தியான சேவையை இந்நிறுவனம் வழங்கவில்லை.

குறிப்பாக, '5ஜி' அதிக வேக இன்டர்நெட் பயன்பாட்டில் உள்ள சூழலில், '3ஜி' சேவையை இன்றளவிலும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

அவ்வப்போது தான், '4ஜி' சேவை கிடைக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த பல வாடிக்கையாளர்கள், மீண்டும் தனியார் டெலிகாம் நிறுவன சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகம் முழுதும் பி.எஸ்.என்.எல்., சிக்னல் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில், சிக்னல் கிடைக்காமல் பொது மக்கள் திண்டாடுகின்றனர்.

சென்னை கிரீம்ஸ் சாலையில், தமிழக பி.எஸ்.என்.எல்., தலைமையகம் அமைந்துள்ளது, இதை சுற்றி மத்திய - மாநில அரசு அலுவலகங்கள், பிரபல தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன.

இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் போனுக்கே சிக்னல் கிடைப்பதில்லை என புலம்புகின்றனர்.

இது குறித்து, பி.எஸ். என்.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பணியில் சேர்ந்து, 15 ஆண்டுகளாகி விட்டன. முன்பெல்லாம் பி.எஸ்.என்.எல்., சிம் கார்டுகளை, மக்கள் போட்டி போட்டு வாங்கினர்.

இப்போது, நாங்கள் விற்பனையை அதிகரிக்க, 'ஸ்டால்' அமைத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை.

'சிக்னல் கிடைக்கவில்லை; பேசிக் கொண்டிருக்கும்போது அழைப்பு துண்டிக்கப்படுகிறது' என, புகார்கள் தெரிவிக்கின்றனர். இவற்றுக்கு தீர்வு காணும் வகையில், பிரச்னைக்குரிய இடங்களை கண்டறிந்து சரி செய்கிறோம்.

ஆனாலும், முழுமையாக செய்ய முடியவில்லை. நாங்கள் பணிபுரியும் தலைமை அலுவலகத்திலேயே, பி.எஸ்.என்.எல்., போனுக்கு சிக்னல் பிரச்னை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டார பொது மேலாளர் பாஸ்கரிடம் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்து விட்டார்.

- நமது நிருபர் -

Advertisement