ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் நீதிமன்ற உத்தரவால் அகற்றம்

மதுராந்தகம்:நீதிமன்ற உத்தரவையடுத்து, மதுராந்தகம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவில்களை இடித்து அகற்றிய நிர்வாகி, சிலைகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.
மேட்டுப்பாளையத்தில், சனீஸ்வரன், ஈஸ்வரன், அம்மன், அய்யப்பன், விநாயகர் கோவில்கள் இருந்தன.
இந்த கோவில்களை, முருகையன், 55, என்பவர் நிர்வகித்து வந்தார். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக, சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றும்படி, ஆறு மாதங்களுக்கு முன், வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கோவிலை அகற்றக்கோரி, மதுராந்தகம் வருவாய் துறையினர், கோவில் நிர்வாகி முருகையனிடம், பலமுறை நோட்டீஸ் அளித்தனர்.
இந்நிலையில், நிர்வாகி முருகையன் நேற்று முன்தினம், இரவோடு இரவாக கோவில்களை இடித்து, சிலைகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார். நேற்று அங்கு வந்த பக்தர்கள், கோவில் இடிக்கப்பட்டதால் மிகுந்த வேதனையுடன் சென்றனர்.