பஸ் டிரைவரை கன்னத்தில் அறைந்த வாலிபரால் போக்குவரத்து பாதிப்பு

திருப்புல்லாணி,: -ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் ஆம்னி பஸ்சில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் டிரைவரை வாலிபர் கன்னத்தில் அறைந்தார். இதனால் சாலையின் குறுக்கே பஸ்சை நிறுத்தியதால் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மண்ணடியில் இருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக தனியார் ஆம்னி பஸ்சில் திருப்புல்லாணி பொக்கனாரேந்தலைச் சேர்ந்த வினோத் குமார் 31, புக்கிங் செய்திருந்தார். சென்னையில் ஆம்னி பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்பட வினோத்குமார் தவற விட்டார்.
பிறகு அவர் ஆட்டோ பிடித்து கோயம்பேடு சென்று அலைபேசியில் டிரைவரை தொடர்பு கொண்டு பஸ்சை பிடித்தார். பஸ் புறப்பட்டதும் இதுதொடர்பாக வினோத்குமாருக்கும், பஸ் டிரைவர்களான கடலாடி பாரதி 36, எஸ்.ஆலங்குளம் செல்வகுமாருக்கும் 42, தகராறு ஏற்பட்டது.
நேற்று காலை அந்த பஸ் திருப்புல்லாணி அருகே நான்குவழிச்சாலையில் வந்த போது இந்த பிரச்னையில் வினோத்குமார் டிரைவர் செல்வகுமாரை கன்னத்தில் அறைந்தார்.
இதையடுத்து பஸ்சை சாலையில் நடுவில் நிறுத்தி இரு டிரைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பத்து நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. பிறகு அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர்.