21 கட்சிகள் குரல் கொடுத்தும் முதல்வரிடம் பதில் இல்லையே: 12 நாள் போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை

மதுரை: தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி 12 நாட்கள் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்காக தி.மு.க., கூட்டணி உட்பட 21 கட்சிகள் குரல் கொடுத்தும் முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லையே என வேதனையில் உள்ளனர்.
தமிழகத்தில் 2012ல் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களால் 6 முதல் பிளஸ் 2 வரை கணினி, ஓவியம், உடற்கல்வி என 30 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடி வெறுத்த பலர், வேறு பணிக்குச் சென்றுவிட்ட நிலையில் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டும் உள்ளனர்.
இந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக 2016, 2021 சட்டசபை தேர்தல்களின்போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. 2021ல் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர் போராட்டம் நடத்தியும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
மனஉளைச்சலில் ஆசிரியர்கள்
கடைசியாக ஜூலை 8ல் சென்னையில் போராட்டம் துவங்கி 12 நாட்கள் நடத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர். அ.தி.மு.க., பா.ம.க. உட்பட பல்வேறு கட்சிகளுடன் தி.மு.க. ,கூட்டணியில் உள்ள இ.கம்யூ., மனிதநேய மக்கள் கட்சி உட்பட 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அமைச்சர் நிலையில் கூட போராட்ட ஆசிரியர்களிடம் பேச்சு நடத்த வராததால் மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் தர்மபுரியில் நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் 100 நாட்களில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார். தற்போது ஆயிரத்து 540 நாட்களை கடந்துவிட்டது. ஆட்சி காலம் நிறைவடைய இன்னும் 280 நாட்கள் தான் உள்ளன.
வாழ்க்கை நடத்த முடியாத அளவு குறைந்த சம்பளத்தில் 13 ஆண்டுகள் கடந்து விட்டன. மே சம்பளம் இல்லை. காப்பீடு, மரணம் அடைந்தால் குடும்ப நிவாரணம் இல்லை. கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் கூட ரூ.10 லட்சம் நிவாரணம் கிடைக்கிறது. ஆனால் 30 லட்சம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் வீதியில் நின்று போராட வேண்டியுள்ளது. கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்ற கேட்கிறோம்.
நிதிப் பற்றாக்குறை எனக் கூறி நீதியை மறுக்கிறது மாநில அரசு. ஓட்டுக்களை பெற இலவச திட்டங்களுக்கு ரூ. பல கோடிகள் ஒதுக்கும் அரசுக்கு, கல்வி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்க மனமில்லை என்றனர்.












மேலும்
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
-
இன்ஸ்பெக்டர் மீதான புகார்: விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு
-
துாய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்னடைவுக்கு கண்டனம்
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது நீதிமன்றம்