அம்மையப்பநல்லுாரில் 'சிசிடிவி' கேமரா பழுதால் குற்றச்சம்பவங்களை கண்காணிப்பதில் சிக்கல்

உத்திரமேரூர்:அம்மையப்பநல்லுார் நான்குவழிச் சாலை சந்திப்பு பகுதியில், பழுதான, 'சிசிடிவி' கேமராவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் அடுத்த, அம்மையப்பநல்லுார் பகுதியில் நான்குவழிச் சாலை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பின் வழியே சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு, எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுவதால் அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடந்து வந்தன.

இதை தடுக்க உத்திரமேரூர் போலீசார் சார்பில், சில ஆண்டுக்கு முன், 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, அவை முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. கேமராவின் கேபிள்கள் அறுந்து தொங்கிய நிலையில் உள்ளன.

இதனால், அப்பகுதியில் நடக்கும் கனிமவள கடத்தல், சாலை விபத்துகள், வழிப்பறி ஆகிய சம்பவங்களில், வாகனங்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. பழுதான கேமராவால் அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் பெருகுவதற்கான வழிவகைகள் அதிகரித்துள்ளன.

எனவே, பழுதடைந்துள்ள கேமராவை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement