சோழிங்கநல்லுார், துரைப்பாக்கத்தில் சாலையில் திடீர் பள்ளத்தால் பீதி

சோழிங்கநல்லுார்,:நான்கு அடுக்கு நிலையங்கள் அமைக்கப்பட உள்ள சோழிங்கநல்லுார் சந்திப்பில் திடீரென பள்ளம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓ.எம்.ஆரில் டைடல் பார்க் முதல் சிறுசேரி வரை, 21 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதில், சோழிங்கநல்லுார் சந்திப்பில், நடைபாதை, பேருந்து பாதை மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் என, 100 அடி உயரத்தில் நான்கு அடுக்குகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக, பக்கவாட்டில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதில், ஆட்டோ காஸ் நிலையம் இருந்தது. இதற்காக அமைக்கப்பட்ட எரிவாயு குழாய், டேங்கர் உள்ளிட்டவற்றை சரியாக மூடவில்லை. இதனால், ஏற்கனவே ஆங்காங்கே பள்ளம் விழுந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8 அடி வரை பள்ளம் விழுந்து சாலை உள்வாங்கியது. இதனால், சோழிங்கநல்லுாரில் இருந்து மேடவாக்கம் நோக்கி செல்லும் பாதையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளம் விழுந்த இடத்தை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில், பள்ளத்தை மூடி சாலையாக மாற்றம் செய்ய உள்ளதாக, மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர்.

அதேபோல், ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம் கார்ப்பரேஷன் சாலையில், கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில், நீண்ட நாட்களாக கழிவுநீர் கசிந்து கொண்டிருந்தது.

நேற்று, திடீரென கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை உள்வாங்கி பள்ளம் விழுந்தது. நேற்று, வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால், பள்ளத்தை வாகன ஒட்டிகள் எளிதில் கண்டறிந்தனர்.

பின், அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுப்பு வைக்கப்பட்டது. குடிநீர் வாரிய அதிகாரிகள் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும், பள்ளம் விழுந்த சாலையை, ஓரிரு நாட்கள் பயன்படுத்த முடியாது என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement