அடையாறில் நடந்த படகு போட்டி கொழும்பு கிளப் மகளிர் அணி 'சாம்பியன்'

சென்னை:கிளப் அணிகளுக்கு இடையே நடந்த படகு போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் கொழும்பு வீராங்கனையர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மெட்ராஸ் போட் கிளப் மற்றும் கொழும்பு ரோயிங் கிளப் இணைந்து, 84வது மெட்ராஸ் - கொழும்பு ரெகாட்டா எனும் இரண்டு கிளப்களுக்கு இடையே படகு போட்டியை நடத்தின.

சென்னை, அடையாறு ஆற்றில் நேற்று முன்தினம் போட்டி நடந்தது. இதில், இரண்டு கிளப் அணிகளை சேர்ந்த 50க்கு மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.

முதலில் ஆடவர் பிரிவில் 'தீபம்' கோப்பைக்கான எட்டு போட்டியும், மகளிர் பிரிவில் 'அடையாறு' கோப்பைக்கான நான்கு போட்டியும் நடந்தன.

போட்டி முடிவில், ஆடவர் பிரிவில் மெட்ராஸ் போட் கிளப் அணி 38 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மகளிர் பிரிவில் கொழும்பு ரோயிங் கிளப் அணி, 17 புள்ளிகள் பெற்று அசத்தியது.

குழு பிரிவு போட்டியில், மெட்ராஸ் போட் கிளப் வீரர்கள் ஜோதி பாண்டி, நவீன், பிரசாத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், மெட்ராஸ் போட் கிளப்பைச் சேர்ந்த ஆர்யதேவ் வெற்றி பெற்றார். மகளிருக்கான இரட்டையர் பிரிவில் கொழும்பு ரோயிங் கிளப் வீராங்கனையர் அனித்ரா பெர்னாண்டோ, பினுரி குணவர்த்தன ஜோடி வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

Advertisement