'வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்'

5

விழுப்புரம் : 'வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை தி.மு.க., அரசு தராவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.

விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில் நடந்த போராட்டத்தில் அவர் பேசியதாவது:





தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்து 1,208 நாட்கள் ஆகியும், தி.மு.க., அரசு இட ஒதுக்கீட்டை வழங்க மறுத்து வருகிறது.


முதல்வர் ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டு மட்டும் வேண்டும். அவர்கள் முன்னேறவோ, படிக்கவோ, பணிக்கு செல்லவோ, சுயமரியாதையோடு வாழவோ கூடாது.


தமிழகத்தில் தற்போது வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு தர ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழக அரசுக்கு ஒதுக்கீடு தர அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால், ஸ்டாலினுக்கு அந்த எண்ணம் துளியும் இல்லை.



ஆந்திரா, கர்நாடகா, பீஹார், ஒடிசா மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ஸ்டாலின் மட்டும் அதிகாரம் இல்லை என கூறுகிறார்.


இந்திய புள்ளியியல் விபரம் சேகரிப்பு சட்டத்தின் படி, பஞ்சாயத்தில் ஊராட்சி தலைவருக்கு கூட கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது. இதை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.



தி.மு.க.,வில் 133 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், 23 பேர் வன்னியர்கள், 4 அமைச்சர்கள் உள்ளனர். 5 பேர் எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் உணர்வின்றி உள்ளனர். தி.மு.க.,வை நம்பாதீர்கள் என ராமதாசிடம், அன்றே நான் கூறினேன். அவர், ஸ்டாலினை நம்பினார்.



தற்போது பட்டை நாமத்தை போட்டு விட்டனர். இட ஒதுக்கீடு தராமல் தமிழகத்தின்
வளர்ச்சியை கெடுத்து விட்டனர்.


இதன் பிறகும், ஸ்டாலின் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும். அதன் பிறகு சாலை மறியல் நடக்கும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement