வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரம்; ஸ்ரீபெரும்புதுாரில் இளம்பெண் கொலை

ஸ்ரீபெரும்புதுார்: நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டான நிலையில், தன்னை ஒதுக்கிவிட்டு வேறு ஒருவருடன் காதலி பழகியதால் ஆத்திரமடைந்த காதலன், ஸ்ரீபெரும்புதுாரில் அவரை கொலை செய்துவிட்டு, நாகப்பட்டினம் போலீசில் சரண் அடைந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா, 25. ஸ்ரீபெரும்புதுாரை அடுத்த, மேவலுார்குப்பம் அருகே உள்ள கிறிஸ்துவ கண்டிகையில், ஐந்து மாதங்களாக வாடகைக்கு தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இவரும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினேஷ், 27, என்பருவம், எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் ஓராண்டுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனிடையே, தினேஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால், ஓராண்டாக அவரிடம் சவுந்தர்யா பேசாமல் இருந்து வந்தார்.

பின், தான் பணியாற்றும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பருடன், சவுந்தர்யா பழகி வந்ததை தினேஷ் அறிந்தார்.

இதையடுத்து, ஏப்ரலில் நாகப்பட்டினத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் மேவலுார்குப்பம் வந்தார். சவுந்தர்யா தங்கியுள்ள அறைக்கு அருகே வாடகை அறை எடுத்து தங்கி, அவர் பணியாற்றும் தொழிற்சாலையில், மூன்று மாதங்களாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நீண்ட நேரமாக தினேஷின் அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்தத்தினர், ஜன்னல் வழியே உள்ள பார்த்தபோது, சவுந்தர்யா ரத்த வெள்ளத்தில் உயிழிரிழிந்து கிடந்தது தெரிந்தது.

தகவலறிந்து வந்த போலீசார் சவுந்தர்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சவுந்தர்யாவை கொலை செய்ததாக, நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில், தினேஷ் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சரண் அடைந்தார்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

தன்னை ஒதுக்கிவிட்டு, கடலுாரை சேர்ந்த விக்னேஷ் என்பவரை சவுந்தர்யா காதலித்து வந்தது தினேஷிற்கு பிடிக்கவில்லை. இதனால், ஆத்திரத்தில் இருந்த தினேஷ், நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு சாதுர்யமாக பேசி, சவுந்தர்யாவை தன் அறைக்கு அழைத்துள்ளார்.

தன் அறைக்கு வந்த சவுந்தர்யாவை, மறைத்து வைத்திருந்த கத்தியால், குத்தி கொலை செய்து விட்டு, அங்கிந்து தப்பினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையாம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த அவரை, அங்கிருந்து ஸ்ரீபெரும்புதுார் அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement