நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

4


சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 20) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

விடுதியில் பாலியல் தொந்தரவு

பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் கிராமத்தில், பெரியார் குடில் என்ற பெயரில், அரசு நிதி உதவி பெறும் உண்டு, உறைவிட பள்ளி, விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கான பள்ளியும், ஒன்று முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியருக்கான விடுதியும் உள்ளது.



இப்பள்ளி மற்றும் விடுதியை திருச்சியை சேர்ந்த மனோகர் மனைவி சுஜாதா நிர்வகிக்கிறார். விடுதியில், 14 மாணவியர், 19 மாணவர்கள் தங்கி உள்ளனர். விடுதி மாணவர்களுக்கு, விடுதி வார்டன்கள் இருவர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். விடுதி வார்டன்கள், ஓராண்டுக்கும் மேலாக மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
விடுதி மாணவர் ஒருவருக்கு, 9, 10 வயதுள்ள நான்கு மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். 14 வயது மாணவர்கள் இருவர், மூன்று மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் புகார்படி, 9, 10 வயது வரை உள்ள நான்கு மாணவர்கள் மீதும், 14 வயது மாணவர்கள் இருவர் மீதும், ஒரு மாணவர் கொடுத்த புகார்படி, விடுதி வார்டன்களான பெரம்பலுார் மாவட்டம், நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ஐயம்பெருமாள், 51, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ், 34, ஆகியோர் மீது, பெரம்பலுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.

வார்டன்கள் இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மாணவர்கள் நான்கு பேரை, திருச்சி அரசு சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவான இரண்டு மாணவர்களை தேடி வருகின்றனர்.


சிறுமிக்கு பாலியல் தொல்லை

பந்தலுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு, ஒரு மகள் உள்ளார்.
கடந்த, 2019ம் ஆண்டு செப்., மாதம் அவர் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்துள்ளது. கூட்டம் முடிந்ததும், 10 வயது சிறுமி உடல் சோர்வாக இருப்பதை கவனித்த ஆசிரியை, இதுகுறித்து சிறுமியிடம் கேட்டு உள்ளார்.



அப்போது, 'அதே ஆண்டு மே மாதம் விடுமுறைக்காக சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி,30, என்பவர் சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்,' என்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கும், தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.


இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தேவாலா அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிகட்ட விசாரணையில், குற்றவாளி சுப்ரமணிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.



பாலியல் தொல்லையால் பாதிப்பு
அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த, 8ம் தேதி, பாலியல் தொல்லை கொடுத்த, 53 வயதான நபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர், சிறுமியை தொந்தரவு செய்வதை தடுக்கும் வகையில், வருவாய் நீதிமன்ற நடுவரான கோட்டாட்சியர், சிறுமிக்கு பாதுகாப்பு அளிக்க, கைதான 53 வயது நபரிடம் நன்னடத்தை பிரமாண பத்திரம் பெற்று, சிறுமிக்கு ஓராண்டுக்கான பாதுகாப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.



இதேபோல், திருமங்கலத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த, அண்ணா நகரைச் சேர்ந்த அஜித்குமார், 31, என்பவர், பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இப்பெண்ணுக்கும் இதேபோல் ஓராண்டுக்கான பாதுகாப்பு உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது.

Advertisement