திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

9

புதுடில்லி: திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் வழிபாடு மற்றும் பிரசாதத்திற்கு நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனுவை, சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.

திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் வழிபாடு மற்றும் பிரசாத பயன்பாட்டிற்கு நாட்டு மாடுகளின் பால் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், 'ஆகம சாஸ்திரங்களின்படி, நாட்டு மாடுகளின் பாலை பயன்படுத்துவது ஒரு அத்தியாவசிய பராம்பரியம் என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சுந்தரேஷ், ''இத்தகைய வகைப்பாடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மொழி, சாதி, சமூகம் அல்லது மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டவை. கடவுளால் விதிக்கப்பட்டவை அல்ல.

''கடவுள் எல்லா மனிதர்களுக்கும் சமமானவர். அவர் அனைவருக்கும் கருணை காட்டுபவர். மற்ற உயிரினங்களிடமும் அதே கருணையை காட்டுபவர். கடவுள் ஒரு உள்ளூர் பசுவின் பாலை மட்டுமே விரும்புகிறார் என்று நீங்கள் கூற முடியாது. பசுவில் அனைத்து இனங்களும் பசுதான். மனுவை பரிசீலிக்க விரும்பவில்லை என்று கூறி கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதையடுத்து, மனுதாரர், மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
தேவையெனில் அவர், மாநில உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

Advertisement