விரைவில் விக்டோரியா ஹால்..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது இந்த கட்டிடம் கண்ணில் படாமல் இருக்காது...
இது என்னவாக இருக்கும் என்று நமக்குள் கேள்வி கேட்டு அது என்னவாகவோ இருந்துவிட்டு போகட்டும் என்று கடந்து போய்விடுவோம்
விக்டோரியா பொது மண்டபம் அல்லது விக்டோரியா ஹால் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம்தான் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
விக்டோரியா ஹால் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டடம் ஆகும். விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக கட்டப்பட்ட இது, பிரிட்டானியா ளிகட்டிடக்கலையில், சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்களில் எடுத்துக்காட்டாக உள்ள கட்டிடமாகும்.
1882 மார்ச்சில் சென்னை ஜார்ஜ் டவுனில் வசித்து வந்த முக்கியப் பிரமுகர்கள் ஒன்று கூடி, சென்னை நகரில் ஒரு டவுன் ஹால் கட்ட முடிவு செய்தனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட 30 பேரால் சுமார் 16,425 ரூபாய் திரட்டப்பட்டதோடு, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 12 பேரைக் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்றைய சென்னை மாநகராட்சி, 1883 டிசம்பர் 17 அன்று 'பீப்பிள்ஸ் பார்க்' என்ற பகுதியில் இருந்து 57 கிரவுண்ட் (3.14 ஏக்கர்) நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தது. ஒரு கிரவுண்ட் இடத்துக்கு எட்டு அணாக்கள் வீதம் ரூபாய் 28ஐ ஆண்டுதோறும் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 99 ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1883 டிசம்பர் 17 ஆம் நாள் விஜயநகர மாகாராஜாவான ஸ்ரீ பௌசபதி அனந்த கஜபதி ராஜு, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் கட்டடம் கட்ட நன்கொடையாக ரூபாய் 10 ஆயிரமும் அளித்த 35 பேரின் பெயர் பொறித்த கல்வெட்டையும் பதிக்கப்பட்டது.இது 1887 ஆம் ஆண்டு கன்னிமார பிரபுவால் திறக்கப்பட்டது,
இந்த மண்டபமானது பொது மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான இடமாக மாறியது. சுவாமி விவேகானந்தர், கோபால கிருஷ்ண கோகலே, சுப்பிரமணிய பாரதியார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற பிரபலங்கள் இந்த அரங்கில் கூட்டங்களை நடத்தியுள்ளனர். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற தமிழ் நாடக முன்னோடிகள் தங்களது நாடகங்களை இங்கு நடத்தினர்.
சென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது இங்குதான். மெட்ராஸ் போட்டாகிராபிக் ஸ்டோரின் உரிமையாளரான ஸ்டீவன்சன் என்பவர் பத்து குறும்படங்களைக் கொண்டு சில காட்சிகளை இங்கு திரையிட்டார்.நகரம் தெற்குப் பகுதியில் வளர்ந்ததாலும், திரைப்பட ஊடகம் மிகுந்த பிரபலமடைந்ததாலும், இக்கட்டடம் படிப்படியாக பொது கவனத்திலிருந்து விலகியது.
1985 ஆம் ஆண்டில் குத்தகைக் காலம் முடிவடைந்ததையடுத்து, குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்க மாநகராட்சி விரும்பாததால், ஒரு சட்டப் போராட்டம் ஏற்பட்டது. இந்த விசயத்தில் ஒரு சமரசம் எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டட வளாகத்தின் பகுதிகள் உள்குத்தகை விடப்பட்டுள்ளதை எதிர்த்த மனு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரங்கத்துக்குச் சொந்தமான நிலப்பகுதிகள் அரங்கம் புதிப்பிக்கப்பட்ட 2010க்கு முன்பு பல்வேறு அமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. சுமார் 32 கடைகள் புதுப்பித்தலின்போது அகற்றப்பட்டன.
இதன் தரைதளக் கட்டடமானது 13,342 சதுர அடி பரப்பளவில் உள்ளது. முதலாவது தளமானது 12,541 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. தரைதளம் மற்றும் முதல் தளங்களில், இரண்டு பெரிய கூடங்களாக ஒவ்வொன்றிலும் 600-க்கும் மேற்பட்டவர்கள் அமரத்தக்கவாறும், அதனுடன் 200 பேருக்கு மேற்பட்டவர்கள் அமரக்கூடியதாக மரத்தால் அமைக்கப்பட்ட காட்சியகம் அமைந்துள்ளது.
1967 அக்டோபரில் அரங்கத்தில் மறுசீரமைப்பு பணிகள் துவங்கி, அப்போதைய முதலமைச்சரான அண்ணாதுரையால் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சியானது 2009 ஏப்ரலில் சவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் 3 கோடியே 90 லட்ச ரூபாய் செலவில் மண்டபத்தை புதுப்பிக்கத் தொடங்கியது. இந்தப் புணரமைப்புப் பணிகளில் சேதமடைந்த கூரையை மாற்றுதல் மற்றும் மரத் தரையையும், மாடிப்படிகளையும் சரிசெய்தல் போன்ற பணிகள் உள்ளடக்கிதாக இருந்தது. இதன் கூரையானது தேக்கு மரத்தினால் சீரமைக்கப்பட்டு, மங்களூர் ஓடுகள் கட்டிடத்தை அழகுபடுத்துகின்றன. பழைய கடப்பா கற்களுக்கு பதிலாக ஓரளவு பளபளப்பான கற்கள் அண்மையில் பதிக்கப்பட்டன.
தரைத் தளத்தில் ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 600 பேர் அமரக்கூடிய அரங்கத்தைக் கொண்ட முதல் தளத்தில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தலாம்.தற்போது பராமரிப்பு வேலைகள் முடிவிற்கு வந்துள்ளது அநேகமாக வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக திறக்கப்படலாம்.
படங்கள்:யுவராஜ்