1.2 கிலோ தங்கம் திருடிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

சென்னை, உதவுவதுபோல நடித்து, நகை வியாபாரியிடம் 1.2 கிலோ தங்க கட்டிகளை திருடிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

சவுகார்பேட்டை, நம்மாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் ராம்கோபால் மாஜி, 54; நகை வியாபாரி. கடந்த 19ம் தேதி, தி.நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சிம்சன் சிக்னல் அருகே வந்தபோது, மயக்கமடைந்து கீழே விழுந்தார். லேசான காயம் என்றாலும், ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர், அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சைக்கு பின், தன் பையை பார்த்தபோது 1.2 கிலோ தங்க கட்டிகள் மாயமானது தெரிந்தது.

இது குறித்த புகாரை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், அன்னை சத்யா நகர், காமராஜர் சாலையைச் சேர்ந்த ராஜசேகர், 34, புளியந்தோப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26, என்பதும், நகை வியாபாரிக்கு உதவுவதுபோல நடித்து, தங்க கட்டிகளை திருடியது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். நகை திருடியவர்களை கைது செய்த போலீசாரை, கமிஷனர் அருண் பாராட்டினார்.

Advertisement