வண்டலுார் ஏரிக்கரையில் நிறுத்தப்பட்டுள்ள 'கண்டமான' பஸ்களால் விபத்து அபாயம்

சென்னை, வண்டலுார் ஏரிக்கரையோரம் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கண்டமான மாநகர பேருந்துகளால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வண்டலுார் முதல் வாலாஜாபாத் பிரதான சாலை, 33 கி.மீ., நீண்டுள்ளது. சென்னை ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து மண்ணிவாக்கம், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை.

இந்த சாலையில், வண்டலுார் ஏரிக்கரையோரம், கண்டமான ஐந்து மாநகர பஸ்கள் சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், 'வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில், கழிவு செய்யப்பட்ட பேருந்துகள் நிற்பது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் சட்ட விரோத செயல்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது' என்றனர்.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

மாநகர போக்குவரத்து கழகத்தில் புதிய தாழ்தள பேருந்துகள், மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால், ஓராண்டில் மட்டும் 900 பழைய பேருந்துகளை நீக்கி உள்ளோம். ஏலம் எடுத்தவர்கள், அவற்றை இரும்பு ஸ்கிராப்பாக பிரித்தெடுப்பர்.

அப்படி, வண்டலுார் அருகில் நிறுத்தப்பட்டுள்ள கழிவு செய்யப்பட்ட மாநகர பேருந்துகள் ஏற்கனவே ஏலம் விடப்பட்டவை.

அந்த பேருந்துகளை ஏலம் எடுத்தவர்கள் தான் அப்புறப்படுத்துவர். போக்குவரத்துக்கு இடையூறின்றி, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement