கோல்கட்டா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் 160 பேர் அவதி

4


புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் இருந்து, கோல்கட்டா புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் 160 பேர் கடும் அவதி அடைந்தனர்.


டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI2403 விமானம், பயணிகள் 160 பேருடன் கோல்கட்டாவுக்கு புறப்பட தயாரானது. ஓடுபாதையில் இருந்து புறப்படவிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானம் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. விமானத்தில் தொழில் நுட்ப கோளாறை, சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர்.

ஆனால் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சரியான நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் 160 பேர் கடும் அவதி அடைந்தனர். விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் டில்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனதார வருந்துகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும், விமானங்கள் அடிக்கடி அவசர தரையிறக்கம் செய்யப்படுவதும், பயணியர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement