இந்திய பவுலர்கள் தடுமாற்றம்: 'யூத்' டெஸ்ட் போட்டியில்


செல்ம்ஸ்போர்டு: இந்திய பவுலர்கள் தடுமாற, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 309 ரன் எடுத்தது.


இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் செல்ம்ஸ்போர்டில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 229/7 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் நமன் புஷ்பக் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஏகான்ஷ் சிங், 134 பந்தில் சதத்தை எட்டினார். எட்டாவது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த போது புஷ்பக் 'சுழலில்' ஜேம்ஸ் மின்டோ (46) சிக்கினார். தொடர்ந்து அசத்திய புஷ்பக் பந்தில் அலெக்ஸ் கிரீன் 'டக்-அவுட்' ஆனார். விஹான் மல்ஹோத்ரா 'சுழலில்' ஏகான்ஷ் (117) ஆட்டமிழந்தார்.


இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 309 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் நமன் புஷ்பக் 4, ஆதித்யா ரவாத், அம்ப்ரிஷ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.


பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (20), கேப்டன் ஆயுஷ் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. இந்திய அணி 51/1 ரன் எடுத்திருந்த போது, மழையால் 2ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ஆயுஷ் (24), விஹான் மல்ஹோத்ரா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement