இந்தியாவில் உலக கோப்பை செஸ் போட்டி

புதுடில்லி: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் ('பிடே') இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 2002ல் நடந்த தொடரில் (ஐதராபாத்) ஆனந்த் சாம்பியன் ஆனார். தற்போது, 23 ஆண்டுக்குப் பின் இரண்டாவது முறையாக இந்தியாவில் உலக கோப்பை செஸ் தொடர் வரும் அக். 30- நவ.27ல் நடக்க உள்ளது. நகரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
உலக சாம்பியன் குகேஷ், 2023 உலக கோப்பை தொடரில் 2வது இடம் பெற்ற பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 'நம்பர்-5' ஆக உள்ள அர்ஜுன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள், நடப்பு உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன் உட்பட, மொத்தம் 206 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
போட்டி எப்படி
போட்டிகள் 'நாக் அவுட்' முறையில் நடக்கும். தரவரிசையில் 'டாப்-50' வரையிலான வீரர்கள் நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்பர்.
இதுகுறித்து 'பிடே' தலைமை செயல் அதிகாரி எமில் சடோவ்கி கூறுகையில்,'' செஸ் உலக கோப்பை தொடர் 2021 முதல் 'நாக் அவுட்' முறையில் நடக்கிறது.
2025 உலக கோப்பை தொடரில் 'டாப்-3' இடம் பெறும் வீரர்கள், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல, குகேஷுடன் மோதும் வீரரை தேர்வு செய்யும், 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்,'' என்றார்.

Advertisement