புதிய மென்பொருள் 'ஏ.பி.டி., 2.0' தமிழக தபால் துறையில் அறிமுகம்
கோவை; தமிழக தபால் துறையில், நான்கு மண்டலங்களில் உள்ள கோட்ட தலைமை தபால் நிலையங்கள் மற்றும் இதன் கீழ் உள்ள துணை, கிளை அஞ்சலகங்களில், புதிய மென்பொருள் ஏ.பி.டி.,2.0 பயன்பாடு, இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்திய தபால் துறையில், மென்பொருள் தரம் உயர்த்தப்பட்டு, பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.
தமிழக தபால் துறையை பொறுத்தவரை, திருச்சி மண்டலத்தில், கரூர் கோட்டம் குளித்தலை, மேற்கு மண்டலத்தில் கோவை கோட்டம் கோவை, சென்னை மண்டலத்தில் வேலுார் கோட்டம் வேலுார், மதுரை மண்டலத்தில் கன்னியாகுமரி கோட்டம் தக்கலை ஆகிய தலைமை அஞ்சலகங்கள், இதன் கீழ் உள்ள துணை, கிளை அஞ்சலகங்களில், ஏ.பி.டி., 2.0 (Advanced Postal Technology) பயன்பாடு, இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்கு பின், இரு வாரங்கள் கழித்து, படிப்படியாக, மற்ற தலைமை தபால் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தபால் தொழில்நுட்ப ஊழியர்களால் தரம் உயர்த்தப்பட்ட மென்பொருள் பயன்பாட்டில்,'க்யூஆர்' வாயிலாக பணம் செலுத்தும் வசதி உட்பட, பல்வேறு அம்சங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது, தபால் துறையின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகவும், டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
நீண்ட காலத்துக்கு தபால் சேவைகள் சீராகவும், விரைவாகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்காக, தபால் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.