'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்: பலதுறை பணி பாதிப்பு: பணிச்சுமையால் அவகாசம் கேட்கும் வருவாய்த்துறை

3

மதுரை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் அதிகாரிகள் பங்கேற்க செல்வதால் வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறைகளின் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. பணிச்சுமை கூடுவதுடன் செலவினமும் அதிகரித்து உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேதனைப்படுகின்றனர்.

தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் மக்களிடம் மனுக்கள் பெறும் திட்டம் முகாம் ஜூலை 15ல் துவங்கியது. ஆக. 15 வரை நடைபெறும் இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட துறைகளின் அதிகாரிகள் கட்டாயம் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனால் அந்த அதிகாரிகளின் வழக்கமான பணிகள் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒவ்வொரு தாலுகாவுக்கும் குறைந்தது 5 அல்லது 6 முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக முகாம் நடைபெறும் பகுதிக்கு அனைத்துத் துறையினரும் செல்கின்றனர். பொதுமக்களிடம் மனுக்களை பெறுகின்றனர். இதில் 90 சதவீதம் வருவாய்த்துறை மனுக்களும் 10 சதவீதம் பிற துறை மனுக்களும் வருகின்றன. இவற்றில் மகளிர் உரிமைத் தொகைக்கான மனுக்களே மிகவும் அதிகமாக உள்ளன.

பலதுறைகளிலும் பாதிப்பு இம்மனுக்களை தினமும் கணினியில் பதி வேற்றம் செய்வதுடன், 45 நாட்களில் பதிலளிக்கவும் வேண்டும். ஒவ்வொரு முகாமிலும் பல ஆயிரம் மனுக்கள் வருவதால் அவற்றை பதிவு செய்து பதில் தரவும், நடவடிக்கை எடுக்கவும் அவகாசம் தேவை என்பதால் வருவாய் உட்பட அனைத்துத் துறையினரும் விழிபிதுங்கி உள்ளனர். வருவாய், ஊரக வளர்ச்சித் துறையினரை பொறுத்தளவில் அந்தந்த தாலுகா, ஒன்றியங்களில் இருந்து அதிகாரிகள் செல்கின்றனர். அங்கு வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

அதே சமயம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவம், வேளாண், கல்வி, வேலைவாய்ப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்நலம் போன்ற துறைகள் மாவட்ட அளவில் இயங்குகின்றன. இத்துறையின் துணை கலெக்டர்கள், உதவி இயக்குனர், கல்வி அலு வலர்கள், சூப்பிரண்டு என உயரதிகாரிகள் அனைத்து முகாம்களிலும் பங்கேற்பதால், கலெக்டர் அலுவலகத்தில் முக்கிய பிரிவுகள் வெறிச்சோடி வழக்கமான பணிகள் பாதிக்கின்றன.

இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர் களின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரியில் நடந்துள்ளது. இதில் உங் களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்கள், பட்டா வழங்கும் திட்டத்தில் சந்திக்கும் சிரமங்கள் குறித்து விவாதித்துள்ளனர். இதில் முகாம்களை நடத்த போக்குவரத்து, உணவு, எழுதுபொருள் என பெருமளவு பொருட்செலவு ஏற்படுகிறது. அதற்கேற்ப நிதிஒதுக்கீடு இல்லை. மனுக்களை தினமும் அலைபேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் தேவை. முகாமில் இணையவசதி இல்லாத, வேகம் குறைவான பகுதியில் மனுக்களை பதிவு செய்ய தாதமாகிறது.

மேலும் வருவாய்த்துறையில் 3 ஆயிரம் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன. எனவே தமிழக அரசு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்' எனதீர்மானம் நிறைவேற்றினர்.

பணிநியமனம் அவசியம் மாநில தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் அறிக்கையில், ''வருவாய்த்துறையினருக்கு ஏற்கனவே உள்ள பணிச்சுமையில் இத்திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பணியிடங்களுக்கு உதவியாளர்கள் தேவை உள்ளது. இதற்காக 2023, செப்டம்பரில் 564 பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டும் இதுவரை நியமனம் செய்யவில்லை. நகர்ப்புறங்களில் ஆக்கிமித்து குடியிருப்போரை வரன்முறை செய்து பட்டா வழங்கும் திட்டத்தில் வரும் டிசம்பர் வரை அவகாசம் இருந்தும், ஜூலை 25க்குள் முடிக்க நெருக்கடி அளிக்கப்படுகிறது. இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Advertisement