தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஆளாளுக்கு முரணாக பேசுகின்றனர்: தமிழிசை

சென்னை : ''தமிழகத்தில், இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய தி.மு.க., அரசு, பொறுப்பை தட்டிக் கழித்து, மத்திய அரசின் முதுகுக்குப்பின் ஒளிந்து கொள்கிறது,'' என, தமிழிசை கூறினார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

திருவள்ளூரில், பத்து வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாகி, ஒரு வாரம் கடந்த நிலையில், மீண்டும் மீண்டும், அந்த சிறுமியிடம் கேள்வி கேட்பதால், அவர் அரண்டு போயிருப்பதாக, அவரது தாய் கூறுகிறார்.

'சிசிடிவி' காட்சிகள் தந்த பின்னும், ஒரு வாரம் கழித்து, இருவரை காட்டி, இவர்களாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். இதுதான், இன்றைய ஆட்சியின் நிலைமை.

தமிழகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நான்காண்டுகளாக, எதையுமே செய்யாமல், தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' என, மக்களிடம் செல்வது, ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் முயற்சி.

தமிழகம் விடுதலை பெறுவதற்காக, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்துள்ளன. அதற்கு மக்கள் ஆதரவு தருவர்.

எதிர் அணியில் உள்ள காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஒன்றையும், தி.மு.க., துணை பொதுச்செயலர் சிவா வேறொன்றையும் பேசுகின்றனர். காங்.,கின் ராகுல் பேச்சை, மா.கம்யூ., சண்முகம் எதிர்க்கிறார்.

தி.மு.க.,வின் ஓட்டில், 25 சதவீதம் தங்களுடையது எனக் கூறும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ஜ., பக்கம் போக மாட்டோம் என்கிறார்.

இப்படி ஆளாளுக்கு முரணாக பேசுவதால், தி.மு.க., கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement