24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை : மாஜி அமைச்சர் வலியுறுத்தல்

புதுச்சேரி : ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்துமாறு, சுகாதாரத்துறை இயக்குநரிடம், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார் வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார் நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேளை சந்தித்து பேசினார். அப்போது, சேதராப்பட்டு, கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவை 12 மணி நேரம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதை 24 மணி நேரமும் தொடர வேண்டும். சேதராப்பட்டில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தாலும் வருவதில்லை.

மேலும், கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மற்றும் மருத்துவ அதிகாரி நியமிக்க வேண்டும். வில்லியனுார் அடுத்த கோபாலன் கடை அருகே வாடகை இடத்திலாவது, ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து, ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் பணியமர்த்த வேண்டும். கோபாலன் கடை அருகே இருக்கும் குப்பை கிடங்கில் இருந்து குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்க தினமும், கொசு மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும். கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள மருத்துவர் இடத்தை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement