தைலாபுரத்தில் வேர்க்கடலை சாகுபடி வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு

வானுார் : தைலாபுரம் கிராமத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட வேர்க்கடலை மதிப்பு தொகுப்பு சங்கிலி வயலை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) குமாரி ஆனந்தி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்க திட்டத்தின் கீழ் வேர்க்கடலை சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்து அறுவடைக்குப் பின் மதிப்பு கூட்டுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக 11 வட்டாரங்களில் மதிப்பு சங்கிலி பங்குதாரர்களான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை கண்டறிந்து வேர்க்கடலை சாகுபடி பரப்பை காரிப் மற்றும் ராபி பருவத்தில் அதிகரித்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வானுார் வட்டாரத்திற்கு 250 எக்டர் பரப்பு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 100 எக்டர் பரப்பில் வேர்க்கடலை விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தைலாபுரம் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் ரமேஷ், சொக்கலிங்கம் ஆகியோரது வயலை மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (திட்டம்) குமாரி அனந்தி ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளித்திட அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ், துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி விதை அலுவலர் மோகன்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் ரேகா, மஞ்சு மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement